Sunday, July 10, 2016

அக்கேடியா-2

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து , பார்க் லூப் ரோடு என்னும் சாலையில் பயணத்தை தொடங்கினோம். அந்த சாலை அக்கேடியா பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இருபத்தி ஏழு மைல் சுற்றளவு கொண்டது. நிற்காமல் சென்றால் ஒன்றரை நேரம் பிடிக்கும். நாங்கள் ஒவ்வொரு நோக்கு மையத்திலும் வண்டியை நிறுத்தி காட்சிகளை உள்வாங்கிக்கொண்டு , புகைப்படம் எடுத்து, கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளை கொறித்து  மெதுவாக சென்றோம்.
பிரெஞ்சுமன் விரிகுடா


பொதுவாகவே பாறை நிறைந்த கடற்கரைகள் இருந்தன. ஒரு சிறிய மணல் கடற்கரை. 


ஓட்டெர் செங்குத்துப்பாறை 
கடற்கரையை ஒட்டி நடை பாதை அமைத்திருக்கிறார்கள். கபில் அவர்களின் தள்ளு வண்டியை செலுத்த ஏதுவாக இல்லாததால் நாங்கள் செல்லவில்லை. மதிய உணவிற்கு ஜோர்டன் குட்டை என்ற இடத்தின் அருகில் நிறுத்தினோம். காரை நிறுத்திவதுற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரே கூட்ட நெரிசல்.அந்த குட்டையை பார்த்தவாறே வாங்கிய hummus wrap சாப்பிட்டோம். 

ஜோர்டன் குட்டை , குடிநீர் விநியோகம் செய்ய உபயோகப்படுத்துவதால் , குளிக்க அனுமதி இல்லை. குளிக்க அனுமதி இருந்திருந்தாலும் , குளித்திருக்கப்போவதில்லை. அந்த இடத்தில்  தான், பூங்காவின் ஒரே உணவகம் இருக்கிறது . ஆதலால் ஒரே கூட்டம். நீரை பார்த்துக்கொண்டு  தேநீரும் , வர்க்கியும் சாப்பிடும் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது.  அங்கு ஒரு சிறிய நடை சென்றோம். 
அங்கிருந்து கிளம்பி இன்னொரு நோக்கு மையத்தில் காரை நிறுத்தி , ஈகிள் ஏரியை பார்த்தோம்.


பின் , கேடில்லாக் மலை மீது ஏறினோம். கார் செல்ல பாதை இருக்கிறது. கேடில்லாக் மலை , அக்கேடியாவின் உயரமான  இடம். மலை பாதையில், மறுபடியும் கூட்ட நெரிசல். வெயில் நன்கு ஏறியிருந்தது. 
மறுநாள் காலை சூரிய உதயம் பார்க்க இங்கு தான் வருவதாக உத்தேசம். அதற்கு , காலை மூன்றரை மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டியிருக்கும். அதற்கும் கூட்டம் அதிகம் இருக்கும் போல.  மறுநாள் காலை சூரிய உதயம் பார்க்க , இங்கு வர வேண்டுமா என்று மனைவி ஆரம்பிக்க , ஒரு வாக்குவாதம் நடந்தது. ஒரு வழியாக, காரை நிறுத்தி , கேடில்லாக் மலையிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலையும், திட்டு திட்டாக இருக்கும் முள்ளமன்றி தீவுகளையும் பார்த்தோம். ஆளை கீழே தள்ளும் காற்று. அந்த காற்றில், கபில் அவர்கள் நன்கு தூங்கிவிட்டார். 


விடுதிக்கு சென்று இயற்கையின் அழைப்புக்களை முடித்துவிட்டு, சற்று நேரம் இளைப்பாறினோம். மாலை எங்கு செல்வது என்று மறுபடியும் குழப்பம். சூரிய அஸ்தமனம் பார்க்க மறுபடியும் அக்கேடிய போகலாம் என்று தோன்றியது. ஒரு மாறுதலுக்காக, பார் ஹார்பர் நகரத்துக்கு செல்ல முடிவெடுத்தோம். பார் ஹார்பரின் நகர மையம். சென்ற வருடம் சென்ற லேக் பிளாசிட் என்ற ஊர் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேலை எல்லா நகரகஙளுமே மாலையில் இப்படி தான் இருக்குமோ என்னமோ. உயிர்ப்புடன் இருந்தது. ஒரு வித குதூகல மனநிலை. எங்கு பார்த்தாலும் உணவகங்கள் மற்றும் பப்புகள்.  லோப்ஸ்டர் கறி அதிகமாக கிடைக்கிறது. ஒரு உயர் ரக இத்தாலிய உணவகம் ஒன்றுக்கு சென்றோம். வழக்கம் போல கபில் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பார்ஸல் கட்டிக்கொண்டு விடுதிக்கே போய் விடலாமா என்று தோன்றியது. எடுத்தது கண்டார் இற்றது கண்டார் என்று வேகமாய் சாப்பிட்டு முடித்தோம். உணவை பார்த்தாலே, கபில் குதூகலம் ஆகிவிடுவார். 

அந்தி நேரத்தை, பார் ஹார்பரின் துறைமுகத்தில் கழித்தோம். நிறைய படுகுகளும் , பாய்மரக்கப்பல்களும் நங்கூரம் பாய்ச்சி மிதந்து கொண்டிருந்தன. கீழ்வானம் ஒருவித இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. raspberry ice cream  வாங்கிக்கொண்டு விடுதி நோக்கி திரும்பினோம். மறுநாள் காலை மூன்றரை மணிக்கு கேடில்லாக் மலைக்கு செல்வது முடிவு செய்யப்பட்டது. ஆனால், அலாரம் வைக்காமல்  தூங்கிவிட்டுருந்தேன். மறுநாள் , நாலரை மணி அளவுக்கு முழிப்பு வந்தது. கல்பனா நன்கு தூங்கிவிட்டுருந்தார். எழுப்பி கிளம்பலாமா  என்று கேட்றதுக்கு கிளம்பலாம் என்று  சொல்லிவிட்டு  மறுபடியும்  தூங்கிவிட்டார். சரி என்று, நான் மட்டும் அடித்து பிடித்து சூரிய உதயம் பார்க்க , மறுபடியும் பார்க் லூப் சாலை சென்றேன். மிக களைப்பாக இருந்தது. சூரியன் பிரெஞ்சுமன் விரிகுடாவுக்கு மேலே எழத்தொடங்கியிருந்தது. ஆனால் களைப்பு காரணமாக , கிளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. கடமைக்கு பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினேன். 


விடுதியை காலி செய்துவிட்டு காலை சீக்கிரமே கிளம்பினோம். வழியில் , யோர்க் என்ற ஊரின் கலங்கரை விளக்கத்தை பார்த்துவிட்டு செல்லலாம் என்று. ஆனால் , சிறிய தூரம் சென்ற உடனே,  காரில் ஏதோ பிரச்சனை இருப்பது போல பிரமை வந்து, காரை நிறுத்தி , அதன் கையேட்டினை ஒரு அரை மணி நேரம் படித்திக்கொண்டிருந்தேன். என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. என் பிரமை தான்.  வண்டியைகிளப்பிய உடனே, கபில் முக்கத்  தொடங்கியிருந்தார். அடுத்த நிறுத்தம் வருவதற்குள்,  ஒரு வழி ஆகியிருந்தது. அவரை சுத்தம் செய்ய இன்னொரு அரை மணி நேரம். யோர்க் செல்வதை கைவிட்டோம். மூன்று  பத்து ரூபாய் என்று வாங்கிய கருப்பு கண்ணாடியை நானும் மனைவியும் அணிந்து கொண்டோம். நெடும் பயணத்துக்கு தயார் ஆனோம். 

Stat Count!