Friday, July 29, 2016

வாழ்க்கை மரம்


வாழ்க்கை மரம் படம் நான் 22-23 வயது இருக்கும் பொழுது வெளி வந்திருக்கும். படத்தின் தலைப்பு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினாலும் , பார்ப்பதற்கு ஒரு சில வருடங்கள் ஆயிற்று.  மதீனா வந்த பிறகு பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயமோகன் அந்த படத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்அமேசான் வலைத்தளத்தில் அந்த படத்தை வாங்கினேன் . முதல் தடவை , ஒரு கோடை நாள் மதியம் நன்கு வெயில் ஏறியிருந்த நேரம் பார்த்ததாக நினைவு. படம் ஓர் அளவிற்கு தான் புரிந்தது என்று சொல்ல வேண்டும். பல காட்சிகள் பொருள் தரவில்லை. மதிய நேரம் மெதீனாவில் மிக நிசப்தமாக இருக்கும். பறவைகளின் ஒளி மற்றும் காற்றின் சலனத்தை தவிர. அந்த படம் பார்த்த அன்று ஒரு செயலின்மை இருந்தது. அந்த படம் நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது. மாலையில் நானும், மனைவியும் நீண்ட நடை ஒன்று செல்வோம். நடை செல்லும் தெருக்களெல்லாம் , வாழ்க்கை மரம் படத்தில் சிறுவர்கள் விளையாடுகின்ற , அந்த குடும்பம் வாழும் தெருவை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது. புரியாத படம் ஏன் இவளவு பாதிப்பை செலுத்தியது  என்ன காரணம் என்று இப்பொழுது யோசிக்கும் போது , அந்த படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இரண்டாம் முறை ஓர் இரவன்று பார்த்தேன். அப்பொழுது எப்படி உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. மூன்றாம் முறையாக இன்று பார்த்தேன்.

"இவ்வாழ்கையில் இரு பாதைகள் இருக்கின்றன. இயற்கையின் பாதை, கருணையின் பாதை. இயற்கையின் பாதை அகங்காரத்தால் உருவாவது. கட்டி ஆள நினைப்பது. கருணையின் பாதை இலையை,மரத்தை, பறவையை, பிரபஞ்சத்தை நேசிப்பது. கருணையின் பாதை எடுத்தவர்கள் உலகயியல் விஷயங்களில் தோற்கலாம். ஏமாற்றப்படலாம். அவமானப்படுத்த படலாம். ஆனால் , அவர்களின் வாழ்க்கை முழுமை பெறும்" என்ற இடத்தில தொடங்குகிறது படம்இரண்டாவது மகன் இறந்த செய்தியை தாயும் தந்தையும் அறிகிறார்கள் . அந்த மரணம் , தாய்க்கு பல கேள்விகளை எழுப்பிகிறது. அந்த இடத்தில காட்சி, காலத்தின் தொடக்கத்திற்கு செல்கிறது. பெரு வெடிப்பு நிகழ்கிறது. பால்வெளிகள் உருவாகின்றன. பூமி உருவாகிறது.  உயிர்  ஜனிக்கிறது. அன்பே உருவான இறைவன், பரம்பொருள் எதற்கு 19 வயதே நிரம்பிய ஒரு உயிரை எடுக்க வேண்டும். ஆனால், பிரபஞ்ச நோக்கில் வைத்துப்பார்த்தால்,ஒரு மரணம் என்பது எவ்வளவு அபத்தமானது. பொருளில்லாதது. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், எவ்வளவு கீழ்மை இருந்தாலும், பரம்பொருள் எத்தனை எத்தனை அழகுகளை கொட்டி சமைத்திருக்கிறான்.
இந்த இடம் முடியும் பொழுது , காட்சி வெட்டப்பட்டு , ஒரு ஆண் பெண் காதல் வயப்பட்டதில் இருந்து தொடங்கி அவர்களின் மூன்று மகன்கள் பதின் பருவம் வரை வளரும் காட்சி தொகுப்பு மற்றும் இசை அற்புதமானது . இயற்கை ஆணை,தந்தையை  குறிக்கிறது. கருணை பெண்ணை,தாயை . தந்தையான பிராட் பிட் கண்டிப்பானவர். இசை கலைஞர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்த போதும் , பொறியியல் துறையில் நல்ல வேலையில்  இருக்கிறார். அதைப்பற்றிய வருத்தம் இருக்கிறது. பிள்ளைகளிடம் மிக கண்டிப்பாக இருக்கிறார். அடிக்கிறார்.மனைவியை வெகுளி என்கிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும், தகிடதித்தோம் செய்ய வேண்டும் என்கிறார். நல்லவனாக வாழ்ந்தால் தோற்போம் என்கிறார். தாயான ஜெசிகா சாஸ்டைன் தூய்மையானவர். கரை படியாத தேவதை. அன்பே உருவானவர். மூத்த மகன் ஜாக் தன் பதின் பருவத்தில் இந்த இரு பாதைகளில் எதை எடுப்பது என்ற ஊசலாட்டத்தில் தத்தளிக்கிறான். ஆணில் இயற்கையின் பாதை உறையோடி போயிருக்கறது. ஜாக் ,தனக்கு, தந்தை மீது வெறுப்பு இருந்தாலும், தான் தந்தையை போல் அவரின் குணங்கள்  இருப்பதை உணர முடிகிறது. நண்பனின் மரணத்தால் ,மரணத்தை பற்றிய கேள்விகள் வருகின்றின. அதோடு காமம் அவனை படுத்திக்கறது. அடுத்த வீட்டின் பெண்மணி மேல் ஆசை கொள்கிறான். அவளின் ஆடையை திருடுகிறான். அவனது தாய் மீதும் அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. காமத்தோடு போராடுகிறான். ஓரளவிற்கு ஆற்றுப்படுகிறான். தந்தையின் வேலை போகிறது. அவரின் அகங்காரம் தவிடு பொடி ஆகிறது. ஓரளவிற்கு தன தவறை உணர்கிறார். .  வயதான ஜாக்கின் நினைவுகளாக செல்கிறது படம்.

கடைசி 15 நிமிடங்கள் சரியாக பொருள் தரவில்லை.  காலம் முடிவடைகிறது. .ஜாக் தன் இள வயது தம்பியை, தாயை, தந்தையை கடற்கரையில் தழுவிக்கொள்கிறான். ஆற்றுப்படுகிறான். தாய் தன் இறந்த மகனை இறைவனிடம் ஒப்படைக்கிறாள்.

டெர்ரி மாலிக்க்கின் ஆகச்சிறந்த படைப்பு .

Stat Count!