Tuesday, August 9, 2016

அணில்குஞ்சு

முற்றத்தின் கூரையின் வழி வெயில் பளிச்சென்று அடித்துகொண்டிருந்தது.அணில்குஞ்சு ஒன்று தவறி கூரையினிலிருந்து வீட்டின் முற்றத்தில் விழுந்தது. அது பிறந்து ஒரு சில நாட்கள் தான் இருக்கும் . அல்லது ஒரு சில மணி நேரங்கள் கூட இருக்கலாம். தெரியவில்லை. பேந்த பேந்த விழித்து கொண்டு செய்வதறியாது இங்கும் அங்கும் ஓடியது.முற்றதை ஒட்டி இருந்த தூண் வழி மேலேற பார்த்தது. தூண்கள் உருளையாக, செங்குத்தாக இருந்தமையால் சறுக்கி கீழே விழுந்தது. பல முறை முயன்று தோற்று, பின் சுவர் வழி மேலேற பார்த்தது. அதுவும் சரி வரவில்லை. குடு குடுவென சமையல் கட்டுக்குள் அது ஓட , அதை துரத்தி கொண்டு நான் ஓடினேன். அதன் ஓட்டத்தை சுவர் தடுக்க, அதை பயமுறுத்தி வெளியே துரத்துவதற்காக , கால்களை தட் தட் என்று தரையில் தட்டினேன். பயமுறுத்தப்படுகிறோம் என்று அது அறிந்திருக்கவில்லை . சாக்கு பையில் பரப்பப்படிருந்த காய் கறிகளை எச்சில் செய்து விட போகிறதே என்ற கவலை எனக்கு. சரி, ஏதோ செய்துவிட்டு போகட்டும் என்று நான் வெளியே வந்து விட்டேன் . ஓரிரு மணி நேரம் , அதன் நடமாட்டம் தென்படவில்லை. அதை பற்றிய பேச்சு எதுவோ வர, சண்முகம் அணில் குஞ்சை எடுத்து வாசலில் விட்டு விட்டதாக சொன்னார்.

அந்தி சாய தொடங்கியிருந்தது. பொன்னொளி பரவி இருந்தது. தாழ்வாரத்தில் இருந்த பெஞ்சில் உக்கார்ந்து கொண்டு இடுப்பில் நிற்காத வேட்டியை சரி செய்து கொண்டிருந்தேன். எதிர் வீட்டின் ஒட்டுகூரையில் மயில் ஒன்று ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தது. அதை பார்த்து கொண்டே , வீட்டுக்குளே இருந்து வெளியே வந்த பக்கத்து வீட்டு மாமி " இந்த மண்ணில் வாழ புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். "எல்லாம் பாக்க அழகா தான் இருக்கு. ஓட்ட பிரிச்சு கலச்சா தெரியும் " என்று கடுப்பாகி கொண்டிருந்தார் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த திண்ணை வேதாந்தி மாமா. அப்போது தான் உரைத்தது ; தெரு நாய் ஒன்று சில நிமிடங்களாக குரைத்துக் கொண்டிருந்தது. அவ்வொலி இவ்வவளவு நேரம் என் பிரக்ஞையில் இருந்து எப்படி தப்பிற்று என்று தெரியவில்லை. சுதாரித்துக் கொண்டு அருகே செல்வதற்குள் , நாய் அணில் குஞ்சை கடித்திருந்தது . அது அணிலை புசிக்காமல் சென்று விட்டது. அணில் வானத்தை பார்த்தவாறு மல்லாக்க படுத்திருந்தது . கண்கள் விரிந்திருந்தன . இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வால் துடித்துக் கொண்டிருந்தது.வயிறு விரிந்து சுரிங்கியபடியே இருந்தது . அதன் கடைசி நிமிடங்கள்.

வீட்டின் உள்ளே இருந்து சூடான இட்லி சாப்பிட அழைப்பு வந்தது. தொட்டு கொள்ள சட்னி இல்லை என்று சண்டை போட்டு கொண்டே , மிளகாய் பொடி தொட்டு இட்லிகளை உள்ளே தள்ளினேன்

Friday, July 29, 2016

வாழ்க்கை மரம்


வாழ்க்கை மரம் படம் நான் 22-23 வயது இருக்கும் பொழுது வெளி வந்திருக்கும். படத்தின் தலைப்பு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினாலும் , பார்ப்பதற்கு ஒரு சில வருடங்கள் ஆயிற்று.  மதீனா வந்த பிறகு பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயமோகன் அந்த படத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்அமேசான் வலைத்தளத்தில் அந்த படத்தை வாங்கினேன் . முதல் தடவை , ஒரு கோடை நாள் மதியம் நன்கு வெயில் ஏறியிருந்த நேரம் பார்த்ததாக நினைவு. படம் ஓர் அளவிற்கு தான் புரிந்தது என்று சொல்ல வேண்டும். பல காட்சிகள் பொருள் தரவில்லை. மதிய நேரம் மெதீனாவில் மிக நிசப்தமாக இருக்கும். பறவைகளின் ஒளி மற்றும் காற்றின் சலனத்தை தவிர. அந்த படம் பார்த்த அன்று ஒரு செயலின்மை இருந்தது. அந்த படம் நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது. மாலையில் நானும், மனைவியும் நீண்ட நடை ஒன்று செல்வோம். நடை செல்லும் தெருக்களெல்லாம் , வாழ்க்கை மரம் படத்தில் சிறுவர்கள் விளையாடுகின்ற , அந்த குடும்பம் வாழும் தெருவை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது. புரியாத படம் ஏன் இவளவு பாதிப்பை செலுத்தியது  என்ன காரணம் என்று இப்பொழுது யோசிக்கும் போது , அந்த படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இரண்டாம் முறை ஓர் இரவன்று பார்த்தேன். அப்பொழுது எப்படி உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. மூன்றாம் முறையாக இன்று பார்த்தேன்.

"இவ்வாழ்கையில் இரு பாதைகள் இருக்கின்றன. இயற்கையின் பாதை, கருணையின் பாதை. இயற்கையின் பாதை அகங்காரத்தால் உருவாவது. கட்டி ஆள நினைப்பது. கருணையின் பாதை இலையை,மரத்தை, பறவையை, பிரபஞ்சத்தை நேசிப்பது. கருணையின் பாதை எடுத்தவர்கள் உலகயியல் விஷயங்களில் தோற்கலாம். ஏமாற்றப்படலாம். அவமானப்படுத்த படலாம். ஆனால் , அவர்களின் வாழ்க்கை முழுமை பெறும்" என்ற இடத்தில தொடங்குகிறது படம்இரண்டாவது மகன் இறந்த செய்தியை தாயும் தந்தையும் அறிகிறார்கள் . அந்த மரணம் , தாய்க்கு பல கேள்விகளை எழுப்பிகிறது. அந்த இடத்தில காட்சி, காலத்தின் தொடக்கத்திற்கு செல்கிறது. பெரு வெடிப்பு நிகழ்கிறது. பால்வெளிகள் உருவாகின்றன. பூமி உருவாகிறது.  உயிர்  ஜனிக்கிறது. அன்பே உருவான இறைவன், பரம்பொருள் எதற்கு 19 வயதே நிரம்பிய ஒரு உயிரை எடுக்க வேண்டும். ஆனால், பிரபஞ்ச நோக்கில் வைத்துப்பார்த்தால்,ஒரு மரணம் என்பது எவ்வளவு அபத்தமானது. பொருளில்லாதது. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், எவ்வளவு கீழ்மை இருந்தாலும், பரம்பொருள் எத்தனை எத்தனை அழகுகளை கொட்டி சமைத்திருக்கிறான்.
இந்த இடம் முடியும் பொழுது , காட்சி வெட்டப்பட்டு , ஒரு ஆண் பெண் காதல் வயப்பட்டதில் இருந்து தொடங்கி அவர்களின் மூன்று மகன்கள் பதின் பருவம் வரை வளரும் காட்சி தொகுப்பு மற்றும் இசை அற்புதமானது . இயற்கை ஆணை,தந்தையை  குறிக்கிறது. கருணை பெண்ணை,தாயை . தந்தையான பிராட் பிட் கண்டிப்பானவர். இசை கலைஞர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்த போதும் , பொறியியல் துறையில் நல்ல வேலையில்  இருக்கிறார். அதைப்பற்றிய வருத்தம் இருக்கிறது. பிள்ளைகளிடம் மிக கண்டிப்பாக இருக்கிறார். அடிக்கிறார்.மனைவியை வெகுளி என்கிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும், தகிடதித்தோம் செய்ய வேண்டும் என்கிறார். நல்லவனாக வாழ்ந்தால் தோற்போம் என்கிறார். தாயான ஜெசிகா சாஸ்டைன் தூய்மையானவர். கரை படியாத தேவதை. அன்பே உருவானவர். மூத்த மகன் ஜாக் தன் பதின் பருவத்தில் இந்த இரு பாதைகளில் எதை எடுப்பது என்ற ஊசலாட்டத்தில் தத்தளிக்கிறான். ஆணில் இயற்கையின் பாதை உறையோடி போயிருக்கறது. ஜாக் ,தனக்கு, தந்தை மீது வெறுப்பு இருந்தாலும், தான் தந்தையை போல் அவரின் குணங்கள்  இருப்பதை உணர முடிகிறது. நண்பனின் மரணத்தால் ,மரணத்தை பற்றிய கேள்விகள் வருகின்றின. அதோடு காமம் அவனை படுத்திக்கறது. அடுத்த வீட்டின் பெண்மணி மேல் ஆசை கொள்கிறான். அவளின் ஆடையை திருடுகிறான். அவனது தாய் மீதும் அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. காமத்தோடு போராடுகிறான். ஓரளவிற்கு ஆற்றுப்படுகிறான். தந்தையின் வேலை போகிறது. அவரின் அகங்காரம் தவிடு பொடி ஆகிறது. ஓரளவிற்கு தன தவறை உணர்கிறார். .  வயதான ஜாக்கின் நினைவுகளாக செல்கிறது படம்.

கடைசி 15 நிமிடங்கள் சரியாக பொருள் தரவில்லை.  காலம் முடிவடைகிறது. .ஜாக் தன் இள வயது தம்பியை, தாயை, தந்தையை கடற்கரையில் தழுவிக்கொள்கிறான். ஆற்றுப்படுகிறான். தாய் தன் இறந்த மகனை இறைவனிடம் ஒப்படைக்கிறாள்.

டெர்ரி மாலிக்க்கின் ஆகச்சிறந்த படைப்பு .

Sunday, July 10, 2016

அக்கேடியா-2

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து , பார்க் லூப் ரோடு என்னும் சாலையில் பயணத்தை தொடங்கினோம். அந்த சாலை அக்கேடியா பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இருபத்தி ஏழு மைல் சுற்றளவு கொண்டது. நிற்காமல் சென்றால் ஒன்றரை நேரம் பிடிக்கும். நாங்கள் ஒவ்வொரு நோக்கு மையத்திலும் வண்டியை நிறுத்தி காட்சிகளை உள்வாங்கிக்கொண்டு , புகைப்படம் எடுத்து, கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளை கொறித்து  மெதுவாக சென்றோம்.
பிரெஞ்சுமன் விரிகுடா


பொதுவாகவே பாறை நிறைந்த கடற்கரைகள் இருந்தன. ஒரு சிறிய மணல் கடற்கரை. 


ஓட்டெர் செங்குத்துப்பாறை 
கடற்கரையை ஒட்டி நடை பாதை அமைத்திருக்கிறார்கள். கபில் அவர்களின் தள்ளு வண்டியை செலுத்த ஏதுவாக இல்லாததால் நாங்கள் செல்லவில்லை. மதிய உணவிற்கு ஜோர்டன் குட்டை என்ற இடத்தின் அருகில் நிறுத்தினோம். காரை நிறுத்திவதுற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரே கூட்ட நெரிசல்.அந்த குட்டையை பார்த்தவாறே வாங்கிய hummus wrap சாப்பிட்டோம். 

ஜோர்டன் குட்டை , குடிநீர் விநியோகம் செய்ய உபயோகப்படுத்துவதால் , குளிக்க அனுமதி இல்லை. குளிக்க அனுமதி இருந்திருந்தாலும் , குளித்திருக்கப்போவதில்லை. அந்த இடத்தில்  தான், பூங்காவின் ஒரே உணவகம் இருக்கிறது . ஆதலால் ஒரே கூட்டம். நீரை பார்த்துக்கொண்டு  தேநீரும் , வர்க்கியும் சாப்பிடும் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது.  அங்கு ஒரு சிறிய நடை சென்றோம். 
அங்கிருந்து கிளம்பி இன்னொரு நோக்கு மையத்தில் காரை நிறுத்தி , ஈகிள் ஏரியை பார்த்தோம்.


பின் , கேடில்லாக் மலை மீது ஏறினோம். கார் செல்ல பாதை இருக்கிறது. கேடில்லாக் மலை , அக்கேடியாவின் உயரமான  இடம். மலை பாதையில், மறுபடியும் கூட்ட நெரிசல். வெயில் நன்கு ஏறியிருந்தது. 
மறுநாள் காலை சூரிய உதயம் பார்க்க இங்கு தான் வருவதாக உத்தேசம். அதற்கு , காலை மூன்றரை மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டியிருக்கும். அதற்கும் கூட்டம் அதிகம் இருக்கும் போல.  மறுநாள் காலை சூரிய உதயம் பார்க்க , இங்கு வர வேண்டுமா என்று மனைவி ஆரம்பிக்க , ஒரு வாக்குவாதம் நடந்தது. ஒரு வழியாக, காரை நிறுத்தி , கேடில்லாக் மலையிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலையும், திட்டு திட்டாக இருக்கும் முள்ளமன்றி தீவுகளையும் பார்த்தோம். ஆளை கீழே தள்ளும் காற்று. அந்த காற்றில், கபில் அவர்கள் நன்கு தூங்கிவிட்டார். 


விடுதிக்கு சென்று இயற்கையின் அழைப்புக்களை முடித்துவிட்டு, சற்று நேரம் இளைப்பாறினோம். மாலை எங்கு செல்வது என்று மறுபடியும் குழப்பம். சூரிய அஸ்தமனம் பார்க்க மறுபடியும் அக்கேடிய போகலாம் என்று தோன்றியது. ஒரு மாறுதலுக்காக, பார் ஹார்பர் நகரத்துக்கு செல்ல முடிவெடுத்தோம். பார் ஹார்பரின் நகர மையம். சென்ற வருடம் சென்ற லேக் பிளாசிட் என்ற ஊர் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேலை எல்லா நகரகஙளுமே மாலையில் இப்படி தான் இருக்குமோ என்னமோ. உயிர்ப்புடன் இருந்தது. ஒரு வித குதூகல மனநிலை. எங்கு பார்த்தாலும் உணவகங்கள் மற்றும் பப்புகள்.  லோப்ஸ்டர் கறி அதிகமாக கிடைக்கிறது. ஒரு உயர் ரக இத்தாலிய உணவகம் ஒன்றுக்கு சென்றோம். வழக்கம் போல கபில் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பார்ஸல் கட்டிக்கொண்டு விடுதிக்கே போய் விடலாமா என்று தோன்றியது. எடுத்தது கண்டார் இற்றது கண்டார் என்று வேகமாய் சாப்பிட்டு முடித்தோம். உணவை பார்த்தாலே, கபில் குதூகலம் ஆகிவிடுவார். 

அந்தி நேரத்தை, பார் ஹார்பரின் துறைமுகத்தில் கழித்தோம். நிறைய படுகுகளும் , பாய்மரக்கப்பல்களும் நங்கூரம் பாய்ச்சி மிதந்து கொண்டிருந்தன. கீழ்வானம் ஒருவித இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. raspberry ice cream  வாங்கிக்கொண்டு விடுதி நோக்கி திரும்பினோம். மறுநாள் காலை மூன்றரை மணிக்கு கேடில்லாக் மலைக்கு செல்வது முடிவு செய்யப்பட்டது. ஆனால், அலாரம் வைக்காமல்  தூங்கிவிட்டுருந்தேன். மறுநாள் , நாலரை மணி அளவுக்கு முழிப்பு வந்தது. கல்பனா நன்கு தூங்கிவிட்டுருந்தார். எழுப்பி கிளம்பலாமா  என்று கேட்றதுக்கு கிளம்பலாம் என்று  சொல்லிவிட்டு  மறுபடியும்  தூங்கிவிட்டார். சரி என்று, நான் மட்டும் அடித்து பிடித்து சூரிய உதயம் பார்க்க , மறுபடியும் பார்க் லூப் சாலை சென்றேன். மிக களைப்பாக இருந்தது. சூரியன் பிரெஞ்சுமன் விரிகுடாவுக்கு மேலே எழத்தொடங்கியிருந்தது. ஆனால் களைப்பு காரணமாக , கிளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. கடமைக்கு பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினேன். 


விடுதியை காலி செய்துவிட்டு காலை சீக்கிரமே கிளம்பினோம். வழியில் , யோர்க் என்ற ஊரின் கலங்கரை விளக்கத்தை பார்த்துவிட்டு செல்லலாம் என்று. ஆனால் , சிறிய தூரம் சென்ற உடனே,  காரில் ஏதோ பிரச்சனை இருப்பது போல பிரமை வந்து, காரை நிறுத்தி , அதன் கையேட்டினை ஒரு அரை மணி நேரம் படித்திக்கொண்டிருந்தேன். என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. என் பிரமை தான்.  வண்டியைகிளப்பிய உடனே, கபில் முக்கத்  தொடங்கியிருந்தார். அடுத்த நிறுத்தம் வருவதற்குள்,  ஒரு வழி ஆகியிருந்தது. அவரை சுத்தம் செய்ய இன்னொரு அரை மணி நேரம். யோர்க் செல்வதை கைவிட்டோம். மூன்று  பத்து ரூபாய் என்று வாங்கிய கருப்பு கண்ணாடியை நானும் மனைவியும் அணிந்து கொண்டோம். நெடும் பயணத்துக்கு தயார் ஆனோம். 

Saturday, July 9, 2016

Stat Count!